Saturday, August 7, 2010

வன்னியில் ஒரு மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள்

நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக நீண்ட நாட்களின் பின் கருணையூரானின் வணக்கங்கள் . இந்த பதிவு வன்னியில் மீளக்குடியமர்ந்து குடிசையில் வாழும் ஒரு உயர்தர மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள் இடம்பெற்ற சம்பவங்களை உரையாடல் மூலமாக தந்துள்ளேன் . அவருடைய பெயர் மதி.அவர் குடிசையில் அம்மா , அண்ணாவுடன் இருக்கின்றார்.அண்ணா அங்கம் ஒன்றை இழந்து வீட்டில் சுயதொழில் செய்கின்றார்.மதி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தர கலைப்பிரிவில் கற்கின்றார். முக்கியமான விடயங்களை சுருக்கமாக தந்துள்ளேன்.




அதிகாலையில்.......


அம்மா :- மதி! எழும்பு....விடிஞ்சிட்டு....பெட் சீட்டை விடு மடிச்சு வைக்க....ஆமிக்காரர் கிணத்தடிக்கு வர முன் போயிட்டு குளி..... (ஓகோ.....அப்ப ஊருக்கே ஒரு கிணறா இருக்கு)

மதி :- பொறன எழும்பிறன்.

அம்மா :- குளிக்கேக்க அந்த ரண்டு பயித்தம் கொடிக்கும் தண்ணி ஊத்தி விடு......


மதி எழுந்து பல் விளக்க போகின்றாள்


மதி:- அம்மா பற்பொடி முடிஞ்சுதா ?

அம்மா :- ஓ ..அந்த கல்லில கரிக்கட்டி வைச்சனான் எடுத்து விளக்கு இல்லாட்டி அண்ணா வேப்பம்தடி முறிக்கிறான் ...வாங்கு... ( ம்..இப்படியும் இருக்கு சனம்)

மதி:- அம்மா ! என்ர வலது கால் செருப்பை காணல

அம்மா:- பிறகு வந்து தேடிப்பார் ..இப்ப அண்ணாக்கு வாங்கின செருப்பின்ர வலது கால் சும்மாதானே இருக்கு எடுத்து போடு.... ( ஓகோ ....காலியானது காலா )

மதி:- இண்டைக்கு அக்காவை பாக்க போறியா ? ( இது வேறையா ?)

அம்மா:- ஓ போறன் ...நான் கறி வைச்சிட்டு போறன் ..நீ வந்து அரிசியை போட்டு இறக்கு...

மதி:- ஐயோ ! எனக்கு கல்லரிக்க தெரியாது. நீங்க போட்டுட்டு போங்க (கல்லோட அரிசி ...ம் ...புரியுது யார் தந்தது எண்டு)

அம்மா:- நீ அந்த அரிசியை விட்டுட்டு பெரியம்மா கொண்டுவந்த அரிசில ஒண்டரை சுண்டு போடு


அவ்வாறே மதி புத்தக பையை எடுத்துகொண்டு வீட்டுக்கு முன்னால் பஸ்ஸுக்காக காத்திருக்கின்றாள் .அருகில் பரண் கட்டி காவல்புரியும் ஆமிக்காரன் ( என்ன மதி வீட்டுக்கு காவலா ?) மதியோடு கதை தொடுக்கின்றான்.




ஆமி :- தங்கச்சி ஸ்கூல் போறது.நல்லா படிக்கிறது . சரியா ......என்ன தங்கச்சி இப்ப குளிக்க வாறது இல்ல ...குளிக்கிறது இல்ல தானே ....( என்ன ஒரு அக்கறை )

மதி:- நான் இப்ப இரவு தான் குளிக்கிறனான்( குழந்தை மனசு போல )

ஆமி :- தங்கச்சி உங்க செருப்பு , உடுப்பு நாய் கொண்டுவந்து போட்டிருக்கிறது. நாங்க அதை உள்ளே எடுத்து வைச்சிருக்கிறது. வந்து எடுக்கிறது இப்ப ....என்ன யோசிக்கிறது ..பயம் வேண்டாம் ..நாங்க பிடிச்சு கொண்டு போறதில்ல. ( பிடிச்சு கொண்டு போகமாட்டிங்க ..பிடிச்சு பிடிச்சு விடுவிங்க தானே )

மதி:- பஸ் வருது . போகும் போது வாறன் .


வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி நெரிசலாக வந்த பஸ்ஸில் ஏறி நுழைகின்றாள் மதி. அப்போது திடீரென்று ஒரு பெண்ணின் காரசாரமான சத்தம்........


பெண் :- என்ன பிள்ளை ! காலை மிரிக்கிறாய்..கால் ல பிளேட் வெட்டி புண் எண்டு மருந்து கட்டி இருக்கிற தெரியலயா..பஸ்ஸில போனதில்லையா ..பழக்கவழக்கம் தெரியாதா ?எங்கை இருந்து வருதுகளோ .... ( ஓ அம்மா ! புரியுது நீங்க யாழ்ப்பாணம் தான் போறிங்க எண்டு ...கவனம் காயம் ..மருந்து போடுங்க வடிவா )


பயத்துடன் சத்தம் போடாமல் ஒதுங்கி நிக்கின்றாள் மதி.. அந்த பெண்ணோ ...
கையில் தொலைபேசி ...நெற்றியில் சிவத்த ஒட்டுப்பொட்டு ...அழகாக தலை வாரி விரித்துவிடப்பட்டிருந்தது. ( ம்.... உன்னை சொல்லி குற்றம் இல்லை ..)


மதி பஸ் நடத்துனரிடம் காசை கொடுக்கின்றாள் .


நடத்துனர் :- சில்லறை இல்லை தங்கச்சி ..மிச்சம் பிறகு கேளுங்க .( அட பாவிங்களா இவங்களோடையும் இப்படியா ....கிடைச்ச மாதிரிதான்)


அவ்வாறே மதி கிளிநொச்சியில் பஸ்ஸில் இருந்து இறங்கி பாடசாலை நோக்கி அண்மிக்கின்றாள் . அப்போது வீதியில் சற்று வாகன நெரிசல். வீதிக் கரையில் இராணுவ வீரர்கள் குழுமி நிக்க பெரியவன் ஏதோ நட்டுக்கொண்டிருந்தார் . வேடிக்கை பாத்துக்கொன்டிருந்த மாணவர்களுடன் மதி இணைந்தாள் .


ஆம் ....அது மர நடுகை விழாவாம் . அங்கே அரச மரம் நடப்பட்டு கூடு கட்டப்படுகிறது.( அரோகரா ...முறிகண்டி பிள்ளையாருக்கு அரோகரா) அவ்வாறே பெரியவன் மாணவர்களிற்கு ஏதோ சாப்பிட கொடுத்தவாறே..........


ஆமிப்பெரியவன் :- தம்பி தங்கச்சி மாரே இதை தண்ணி ஊத்தி நீங்க தான் வளர்க்க வேண்டும் . பெரிசா வந்தா நல்லம் தானே .நிழல் தரும் .விளையாடலாம் . இளைப்பாறிப் போகலாம். ( புத்த பகவான் பாதையால வந்தா அப்படியா ஒரேயடியா இளைப்பாறிடுவர்)


அவ்வாறே பாடசாலையினுள் நுழைகின்றாள்.தன்னுடைய வகுப்பறையினுள் சென்று இருக்கின்றாள் .

வகுப்பறையோ..........




ஓட்டைகள் உள்ள நான்கு சுவர்கள் ....கதவு இல்லை நிலை இருக்கு....சீட் இருக்கு ஆனால் சிலாகை இல்லை......சுவர்களில் " பண்டார " , " சுனில்" , "தம்மித" என ஆங்கில , சிங்களங்களில் எழுதப்பட்டிருந்தது . மேசையிலும் ஏதோ எழுதப்பட்டிருந்தது ஆனால் தெளிவற்று இருந்தது . அதாவது
"புலி தாக தம தா " என இருந்தது . ( நான் நினைக்கிறன் " புலிக்கு தாகம் என்றால் தடாகத்துக்குள் தாவும் " என இருக்கலாம்)


ஆசிரியர் வகுப்புக்கு வருகின்றார்.இவர் கல்வியற் கல்லூரியில் ஆரம்ப பிரிவில் கற்று அண்மையில் ஆசிரியராக நியமிக்க பட்டவர். தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போபவர்( பாவம் மனுசன் ..என்ன அக்கறை ..அங்கை இருந்து வருது) . இங்கே உயர்தரத்துக்கு லொயிக் படிப்பிக்க விடப்பட்டுள்ளது,.வழ்மைபோல் பெறாமகளின் 10 நோட்ஸ் கொப்பிகளுடன் வருகின்றார் .( என்ன படிப்பிக்கவோ ? இல்லை படிக்க வாறாரோ? )

சேர்:- சரி நாங்க இண்டைக்கு மிச்சத்தை பாப்பம் . ....இப்ப உதாரணம் சொன்னால் ..." பால் வெள்ளை நிறமானது ஆனால் வெள்ளை நிறம் எல்லாம் பால் இல்லை " ...என்ன மதி விளங்குது தானே ? நீ ஒரு உதாரணம் சொல்லு பாப்பம் ...

மதி :- உதாரணமா ...... " செல் எல்லாம் விழுந்து வெடிக்கும் போது டும் சத்தம் கேக்கும் ஆனால் டும் சத்தம் வரும் போது வெடிப்பது எல்லாம் செல் இல்லை " சரியா சேர் ? ( பிள்ளை இன்னும் மறக்கலயா ...எப்படி மறக்கிற என்ன )

சேர்:- ம் ( தலை ஆட்டுகின்றார்) ( ஆட்டத்தான் தெரியும் )

மதி :- சேர் ! லொயிக் பேப்பரில எத்தனை கேள்வி செய்யணும்

சேர் :- ஏன் அவசரப்படுகின்றாய் ..பேப்பரில பாத்திட்டு சொல்லுறன் . சரி பிள்ளைகள் நான் தூரம் போகணும் மிச்சத்தை பிறகு பாப்பம்.( என்ன சேர் நீங்க அப்ப A/L யும் லொயிக் படிக்கலயா ? முறிகண்டியானே இது எங்கை போய் முடியபோகுதோ)

மதி :- ஏன் சேர் ...நீங்க கிட்ட வந்து இருக்கலாம் தானே ...

சேர் :- சீ..சீ... கஷ்ரம் ..இங்க வசதிகள் காணாது . நல்ல தண்ணியும் இல்லை . A9 றோட் தூசும் ஒத்து வராது.( கஷ்ர பிரதேச படி எண்டு தந்தால் பல்லை இழிச்சு கொண்டு வாங்குவம் என்ன சேர்)


அன்றைய பாடசாலையை முடித்துவிட்டு பஸ் எடுத்து வீட்டு வாசலில் இறங்குகின்றாள். அவளின் செருப்பு , உடுப்பு ஆமிட்டை இருப்பது ஞாபகம் வருகிறது. ஆமியும் கணக்காக


ஆமி :- தங்கச்சி உள்ளே வந்து எடுக்கிறது .

மதி :- நீங்க எடுத்து தாங்க

ஆமி :- பயம் வேண்டாம் ...நான் மேலே நிக்கிறது தானே ..நீங்க போய் எடுக்கிறது .(அதுதானே ....)

உள்ளே நுழைந்த அவளை சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஆமி வரவேற்றான்.( இது அவளுக்கு தெரியாம போயிட்டுதே )

சிறிது நேரத்தின் பின் ஏதோ பேய் பிடித்த போல் செருப்பு , உடுப்புடன் குடிசைக்குள் நுழைகின்றாள் . ( பேய் பிடிச்ச போலவா ? ஏனாக இருக்கும் ? )

ஏதோ வேலை செய்துகொண்டிருந்த அண்ணன் அவளை பார்த்து ...

அண்ணா :- என்னடி ! சட்டை எல்லாம் மஞ்சள் , சிவத்த கறை பிரண்டு இருக்கு ? (யோசிக்க வேண்டிய விசயம்)

மதி :- அது இண்டைக்கு பள்ளிகூடத்தில ஆமி சாப்பாடு தந்தவங்க.அதில மஞ்சள் பருப்பும் பீற்றூட்டும் சாப்பிட்டன் அதான் கறை வந்திட்டுது போல........(ஓகோ ! இங்கயும் இதான் சாப்பாடோ ? ).... ஏதோ.....அவள் அடுப்பை மூட்டி உலை வைக்கின்றாள்.....................

இது தொடருமா ?

என்னடா இவன் கதை எழுதிட்டு எங்களை கேக்கிறான் எண்டு யோசிக்கிறிங்களா?

நன்றாக வாசியுங்க ......

மீண்டும் கேக்கிறன்

இது தொடருமா ?

நண்பர்களே இவை யாவும் கற்பனையே ...ஆனால் சில உண்மை விசயங்களுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.........பொறுமையாக முடிவுவரை வாசித்ததுக்கு நன்றிகள்..........

Wednesday, May 19, 2010

தலைப்பு..........வெற்றிடம்..........


கலையாத கனவோடு கரையேறிப்போனவர்களே
உறையாத உணர்வோடு உறைந்துபோனவர்களே
வலிக்காத வலியோடு வடிந்துபோனவர்களே
வாழாத வாழ்க்கையோடு வாடிப்போனவர்களே............


சத்தமில்லா நீயும் சடுதியாய் வளர்ந்து
உத்தமனாய் உரிமையை கேட்டிருந்தாய்
இரத்தம் தான் முடிவென்று ரதம் ஏறிவந்து
மொத்தமாய் இன்று முழுவதையும் இழந்துவிட்டாய்.......


ஆண்டாண்டு ஓடிச்சென்றாலும்
மாண்டுபோன உன் வரலாறு அழிந்து போனாலும்
மீண்டுவந்து நீ வரலாறு சொல்லாவிட்டாலும்
குண்டு பட்ட எம் உறவுகள் உன் நினைவை மீட்கும்........


உனக்காக நான் என்ன செய்தேன்
உனக்காக நான் என்ன தந்தேன்
உனக்காக நான் எதை இழந்தேன்
என் மனச்சாட்சி கேட்கும் வினாக்களிற்கு
நான் சொல்லும் பதில் ஒரு துளி பேனா மை மட்டுமே........


அழிந்துபோன உறவுக்காக அலைஅலையா போகவில்லை
மடிந்துபோன உறவை மடியில் வைத்து தாலாட்டவில்லை
உடைந்து போன உறவுகளோடு உருகிஅழவில்லை

எப்படி சொல்ல என்னை.......

சுகபோகத்தை அநுபவிக்க பிறந்த சுயநல தமிழன் என்றா?

இல்லை

பட்டம் பதவிக்கு ஆசைப்பட்ட பரதேசி தமிழன் என்றா ?



மறந்து விடுகிறேன் வாழ்ந்த என் வாழ்க்கையை.........

மன்னித்துவிடு என்னை ........

தமிழனுக்காக வாழ்ந்து தமிழை கொல்லும் தமிழனாக இல்லாமல்

தமிழனுக்காகவும் வாழாமல் தமிழையும் கொல்லும் தமிழனாகவும் இல்லாமல்

தமிழனுக்காக வாழாமல் தமிழுக்காக வாழ்ந்த ஒரு தமிழனாக உன்னை சேரும் வரை......................

Wednesday, February 24, 2010

கலங்(க்)கிய காலங்கள்............

நண்பர்கள் அனைவரையும் இன்னொரு பதிவினூடாக சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி . இந்த பதிவினூடாக நான் "வதன நூல்" (Facebook) இல் ஒரு காலம்
( ஐப்பசி 2007 - வைகாசி 2009) போட்ட என் உள்ளத்து உணர்வுகள் சிலவற்றை இந்த பதிவினூடாக தருகின்றேன். உங்கள் பொன்னான நேரத்தை என் இந்த சிறிய பதிவிலே செலவிட்டமைக்கு ஆரம்பத்திலே நன்றியை சொல்லிவிடுறேன். நன்றி சொல்லிடானே என்று மூடாமல் கீழ இழுங்கோ.....

இவை அக்காலத்திற்கு ஏற்றவாறு எழுதப்பட்டது . இக்காலத்தோடு ஒப்பிட்டு பாக்காதீங்க.தப்பாக இருந்தால் மன்னித்துவிடுங்க் பதிவுலகத்தில் தவழ்ந்துகொண்டிருக்கும் இக் கருணைக் குழந்தையை.......




1)
உன் கோலங்கள் மாறினாலும் கொள்கைகள் மாறினாலும் காலன் வரும் வரை காலம் உன்னை காப்பாற்றும்........


வாயால் மட்டும் வெட்டி விளாசும் ஒரு நண்பனுக்காக எழுதப்பட்டது

2)
நான் ஒரு கோழை உன் வாய் முன்னாடி........
ஆனால்

உன்னைப்போல் கோழை இல்லை நாய் முன்னாடி.........
நான் வீரன் என் தாய் முன்னாடி .........
ஆனால்

உன்னைப்போல் வீரன் இல்லை பொய் முன்னாடி .........


3)
கருணையும் நிதியும் இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இன்று புரிந்துகொண்டேன் உன்னிடம் இருப்பது கருணையல்ல நிதி மட்டுமே என்று.......(புரியுது தானே யாருக்கு எண்டு)


4)
ஏய் ! 2008 போறியா நீ ? உனக்கென்று தந்தனுப்ப எனக்கென்று எதுவுமில்லை...

உன் தங்கை 2009 இடம் கொடுத்துவிடுகிறேன் எனக்கு விடிவு கிடைத்தால்.......

5)
+ , * எதுவும் இன்றி - இடமேயின்றி வாடும் உறவுகளை / துடிக்காதே ........
(விளங்காட்டி வெக்கப்படாம கேளுங்கோ)



இது "என்னுடைய சந்தேகம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டது



6)
பேய் கூட இப்போ அதிகமாக அலைகின்றது

அரைகுறையாக செல்லும் ஆத்மாக்களாலோ.............


நாய் கூட இப்போ நன்றியற்றதாக மாறுகின்றது
மனிதனோடு சேர்ந்து வாழ்வதனாலோ................


காய் கூட இப்போ வெம்பி விழுகின்றது
அதுவும் தன் இனப்பெருக்கத்தை வெறுப்பனாலோ..............


பாய் (தாயின்) கூட இப்போ அதிகமாக ஈரமாகிறது
பசியால் அழும் குழந்தையின் கண்ணீராலோ..............


தாய் கூட இப்போ தாலாட்ட மறக்கிறாள்

வடக்கில் வானிலிருந்து மழையாகப் பொழிவதனாலோ........


வாய் கூட இப்போ மூட மறுக்கின்றது
உயிர் எப்போதும் தன்னூடக போகலாம் என்று நினைக்கின்றதோ.......


பொய் கூட இப்போ உண்மையை சுடுகின்றது
இங்கே பொய் தான் வெல்லும் என்று அதற்கும் தெரிந்துவிட்டதோ..............


சேய் கூட இப்போ பால் குடிக்க மறுக்கின்றது
இரத்தவாடை பாலில் இருந்து வருகின்றது என நினைக்கின்றதோ......


நோய் கூட இப்போ அதிகமாக வருகின்றது
அதற்கும் இங்கே மருந்து இல்லை என்று தெரிந்து விட்டதோ.....



இது "எப்போது" என்ற தலைப்பில் எழுதப்பட்டது


7)
பச்சோந்தி தமிழன் இருக்கும் போது. . .

பசுமை வருவது எப்போது?


பொறாமைத்தமிழன் இருக்கும் போது. . .
பொற்காலம் வருவது எப்போது?


சுயநலம் பிடித்த தமிழன் இருக்கும் போது. . .
சுதந்திரம் வருவது எப்போது?


தமிழையே அழிக்கும் தமிழன் இருக்கும் போது. . .
தமிழர்க்கு தனிநாடு வருவது எப்போது?


பிரதேசவாதம் பேசும் தமிழன் இருக்கும் போது. . .
பிரிவு இல்லாமல் வாழ்வது எப்போது?


மனச்சாட்சி இல்லாத தமிழன் இருக்கும் போது. . .
மனம் திறந்து பேசுவது எப்போது?


எப்போது எப்போது என கேட்க வேண்டி இருக்கு. . .
எவனோ ஒருவன் அப்போது விட்ட தவறினால். . . .




இவை என் வாழ்க்கையை பிரதிபலிப்பவை ஆனால் எவ்வளவு தூரம் உண்மை என்று கேக்காதீங்க என்ன ...


8)
கடவுளே ! விதியை எழுதும்போது கிறுக்கிய அதை வெல்ல மதியை வைக்கும்போது சறுக்கிய நீயும் என் வாழ்க்கையில் ஒரு பொறுக்கிதான்......



இது "என்னைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதப்பட்டது



9)
பிறக்கும் போதே சாவின் விளிம்பு வரை சென்றவன் நான்.....

அதனாலோ ?....சாவை கண்டு பயப்படாதவனும் நான்.


கடவுள் எனக்கு தந்தது போதும் என நினைப்பவன் நான்...
அதனாலோ ?... கடவுளிடம் அதிகம் செல்லாதவன் நான்.


அனைவருக்கும் மனச்சாட்சி இருக்கு என நடப்பவன் நான்....
ஆனால் !...அனைவரிடமும் மனச்சாட்சி இருக்கு என நிருபிக்காதவனும் நான்.


தமிழை மிக மிக விரும்புபவன் நான்...
ஆனால் !...தமிழரை மிகவும் வெறுப்பவன் நான்.


என் குல தொழிலை வெறுத்தவன் நான்...
ஆனாலும்... என்னால் முடிந்தவரை என் குலத்தை பின்பற்றுபவன் நான்.


அமைதியனா வாழ்க்கையை விரும்புபவன் நான்...
அதனாலோ ?...அதிகம் அலட்டிக்கொள்ளாதவன் நான்..



நான் நான் என்று அதிகமாக பாவித்துவிட்டேனோ நான்....
...எனக்கும் நான் என்ற ஆணவம் இருப்பதனால் போல ?


மீண்டும் ஒரு பதிவு போட்டு உங்களுக்கு தொல்லை கொடுப்பேன். நன்றிகள்



Wednesday, February 10, 2010

அரசியல் வாதிகளின் காதலர்தின செய்தி ( கற்பனை )

நண்பர்களே மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.காதலர் தின சிறப்பு பதிவாக என்ன போடலாம் என்று யோசித்த போது உதித்த என் கற்பனைதான் இது. காதலர் தினத்தில் எங்கள் அரசியல்வாதிகள் சிலர் காதலர் தினத்தை பற்றி உரையாற்றினால் அல்லது வாழ்த்துச்செய்தி அனுப்பினால் அது எவ்வாறு இருக்கும் என்பதை சுருக்கமாக தந்துள்ளேன் . அரசியல் காரணங்களிற்காக எழுதவில்லை . படித்துப் பாருங்கள் . தப்பிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.





மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்வின் காதலர் தின வாழ்த்துச்செய்தி


கணவன் மனைவி ஆகப்போகும் நாட்டின் செல்வங்களே ! ( என்ன ! ஆகப் போகுமா ? ) வருங்கால நாட்டைக் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறைக் காதலர்களே ! அனைவருக்கும் சாந்தி சமாதானம் நிறைந்த சுபீட்சமான நாளாக இந்த காதலர் தினம் அமைய வாழ்த்துக்கள். ( வழமையான விசயம்)

முப்பது வருட தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு இன்று முதல் காதலர்தினம். ( ஆமால்லே ) அனைத்து காதலர்களும் இன்று பயம் , பதற்றம் இன்றி காதலர் தினத்தை கொண்டாடலாம். எங்கும் சுதந்திரமாக சுற்றி திரியலாம். காலி முகத்திடலுக்கு போகலாம் . கடற்கரைகுப் போகலாம் .படம் பார்க்க போகலாம் . பூங்காக்கு போகலாம். இன்று நீங்கள் சுதந்திர பறவைகள். குதூகலாமாக கொண்டாடலாம். ( இவ்வளவு காலமும் எதுவும் செய்யலயோ )


இந்த நாட்டிலே சாதி மத பேதம் எதுவும் இல்லை .இருப்பது இரு சாதிகள் மட்டும் தான் ஒன்று காதலை நேசிக்கும் சாதி மற்றது காதலை வெறுக்கும் சாதி. ( உண்மைதான் ) எது எவ்வாறு இருந்தாலும் நான் சொல்வதை செய்பவன் செய்வதை சொல்பவன். அந்த வகையில் பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து துடைத்தெறிந்தது போல் இந்த நாட்டிலுள்ள கள்ளக் காதலையும் விரட்டி தாய்த் திருநாட்டை பாதுகாப்பேன். (இதற்காக தனி காவல்த்துறை குழுவை நியமித்தால் நல்லது)


காதலர்களின் எதிர்கால நலன் கருதி ரஷ்யாவின் நிதி உதவியோடு பல வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் . முதற்கட்டமாக தங்காலை கடற்கரையில் பெரிய காதலர் களியாட்ட விடுதி ஒன்றை நிறுவவுள்ளோம். அடுத்த காதலர் தினத்தில் திறப்பு விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் ( உங்க காதலியும் வருவாவோ.. சீ.. மனைவி) . அது மட்டுமல்ல அனைத்து பேரூந்துகளிலும் பின்வரிசை ஆசனங்களை காதலர்களிற்காக ஒதுக்குவது தொடர்பாகவும் ( இப்படியே போனால் ஒதுக்கப்படாத ஆசனமே இருக்காது போல ) திரையரங்குகளில் காதலர் கூண்டுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ( இது தேவை இல்லை வெளிச்சத்தை எல்லாத்தையும் நிறுத்த சொல்லுங்க ) பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைவில் அவை நடைமுறைக்கு வரும். அத்துடன் அடுத்த பொதுத்தேர்தலின் பின் புதிதாக காதல் அபிவிருத்தி அமைச்சை உருவாக்கி அதற்காக அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளேன் . ( அப்ப இன்னும் அமைச்சர்களின் எண்ணிகை கூட போகுது போல ) காதலர்களிற்கு நல்ல எதிர்காலம் உண்டாகுக . நன்றிகள் .






கௌரவ அமைச்சர் முரளிதரனின் காதலர் தின வாழ்த்துச்செய்தி


காதலர்தின நன்நாளிலே உங்களிற்கு வாழ்த்துச் செய்தி தெரிவிப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன் .இன்று எங்கள் நாட்டை எடுத்துக் கொண்டால் அனைத்து காதலர்களும் எவ்வளவு சுதந்திரமாக காதலை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் அதற்கு காரணம் எங்கள் மதிப்புக்குரிய சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தான்.எதிர்க்கட்சிகளோடு இருந்து நாம் எங்களின் காதலர்களையும் அவர்களின் காதலையும் வளர்க்க முடியாது. ஆளும் கட்சியோடு இணைந்து செயற்பட்டால் தான் எங்கள் காதலர்களையும் முன்னேற்றமடைய செய்யலாம்.இன்று மேல் தென் மாகாண காதலர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் பல சுக போகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். எங்கள் காதலர்களும் அனுபவிக்கவேண்டும்.( என்னத்தை சொல்ல வாறிங்க ) அதற்காக எங்கள் சனாதிபதியோடு இணைந்து கிழக்கின் உதயத்தின் கீழ் கிழக்கின் கடற்கரைகளில் மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.(நல்ல அடுக்கடுக்கா நடுங்க என்ன ) விரைவில் இது நடைமுறைப்படுத்தபடும்.


அன்று நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கும் போது பிரபாகரனுக்கு தெளிவாக கூறியிருந்தேன் போராடுவதன் மூலம் எம் காதலர்களோ காதலோ வளராது என்று.( ஓகோ! இதுவும் ஒரு காரணமா ) இன்று அனைத்து காதலர்களும் அதனை உணர்ந்து இருக்கின்றார்கள். அனைத்து காதல்களும் வளர வாழ்த்துக்க .







மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் காதலர்தின வாழ்த்துச்செய்தி


அனைத்து காதலர்களிற்கும் எனது வாழ்த்துக்கள்.இன்று சமாதானமாகவும் சுதந்திரமாகவும் காதலர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றீர்கள். அன்று குச்சு ஒழுங்கைகளில் காதலை கொண்டாடிய எம் காதலர்கள் இன்று தலைநகரில் கொண்டாடும் அளவுக்கு நிலைமையை கொண்டு வந்தது எங்கள் சனாதிபதி தான்.( எங்கட யாழ் காதலர்கள் தானே ? எப்படி கண்டுபிடிச்சிட்டனே ) இன்று தலைநகரில் வெள்ளவத்தை கடற்கரை பற்றைகளிற்கு சென்று பாருங்கள் , சினிமா திரையரங்குகளில் நுழைந்து பாருங்கள் , பெரிய விடுதிகளிற்கு சென்று பாருங்கள் , வெள்ளவத்தை இணைய கூண்டுகளுக்குள் சென்று பாருங்கள் எங்கள் காதலர்கள் எவ்வளவு உல்லாசமாக மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருக்கின்றார்கள் என்று ( ஓகோ அது எங்கட காதலர்களா பார்க்க தெரியவே இல்லையே ) , அந்த வகையில் எங்கள் சனாதிபதிக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கின் கடற்கரையோர முட்கள் , குச்சொழுங்கை முட்கள் என்பவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளதோடு யாழ் பல்கலைக்கழகதிற்கு அருகில் காதலர்களிற்காக தனியான இடம் ஒன்றையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளதோடு அனைத்து காதலர்களிற்கும் பாலியல் கருத்தரங்குகளை நடத்தி( இன்று தேவையான ஒன்று தான்) பங்கு பற்றும் காதலர்களிற்கு ஒரு டசின் ------- களையும் ( இந்த சொல் தணிக்கைக் குழுவினால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது ) வழங்க திட்டமிட்டுளோம்.இதனால் வருங்காலத்தில் எம் காதலர்களும் பயமின்றி காதலை வளர்க்க வழிவகுக்கும்.நன்றிகள்








கௌரவ நாடளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனின் காதலர் தின செய்தி


காதலர்தின நன்நாளில் எங்களுடைய காதலர்களைப் பாருங்கள் . எத்தனை காதலர்கள் இன்று பிரிக்கப் பட்டிருக்கின்றார்கள் . எத்தனையோ காதலர்கள் இன்று சந்திக்க வழியின்றி முகாம்களில் தொடர்பின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் .( முகாமில் இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கா ? எப்படிதான் கண்டு பிடிக்கிறாங்களோ !) அது மட்டுமா இன்று வடக்கில் காதல் பரிசுப் பொதிகளிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. காதலர்கள் பெரும் விலை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியுள்ளது எம் காதலர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் நல்ல தீர்வொன்றை முன் வைக்க வேண்டும். இது தொடர்பாக நான் இந்தியா சென்று கலந்துரையாடினேன். அவர்கள் அது தொடர்பாக அரசாங்கதிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி மொழி அளித்தார்கள். அத்துடன் தமிழ்நாட்டு அரசு தொப்புள்கொடி காதலர்களிற்காக நல்ல இன ரோஜா பூக்களை அனுப்ப முன்வந்துள்ளனர்.தற்போது வீடு வீடாக சென்று சேகரித்து வருகின்றனர் .விரைவில் அது வந்து சேரும்.அனைத்து காதலர்களிற்கும் நல்ல எதிர்காலம் உண்டாகட்டும்.




நண்பர்களே என் வலைப்பூவுக்கு வருகை தந்து பொறுமையாக வாசித்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தந்தமைக்கு நன்றிகள் .வேறை ஒரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம் . அனைவருக்கும் முற்கூட்டிய காதலர்தின வாழ்த்துக்கள்.

Saturday, February 6, 2010

அழகு எது ?...அழகு எது ?... அழகு எது ?...

நண்பர்களே இந்த பதிவிலே " அழகு எது ? " என்ற தலைப்பில் கவிதை போல ஏதோ ஒன்று எழுதியுள்ளேன் . ஏதும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இது வைரமுத்துவின் " மகிழ்ச்சி " என்ற கவிதையின் சாயலை ஒத்தது. அதைக்கேட்டு எங்கள் சமூகத்தோடு சம்மந்தப்படுத்தி எழுதியுள்ளேன் . படித்துப் பாருங்கள்



தமிழ்ப்பதிவருக்கு அழகு எது ?

தினமும் பதிவு எழுதிப்போட்டு வாசிகர்களிற்கு திணிப்பது.....

இல்லை

தன்னைப் பற்றி தானே புகழ்ந்து பதிவு எழுதுவது.....

இல்லை

நாறிப்போன சினிமாவையும் மலிந்து கிடக்கும் விளையாட்டையும் மட்டும் தூக்கிப் பிடிப்பது.....

இல்லவே இல்லை

தமிழ்ப்பதிவருக்கு அழகு தாய் மொழி தமிழில் தப்பின்றி பதிவு எழுதுதல்.....




காதலனுக்கு அழகு எது ?

காதலி தங்கமாக பாதுகாத்து வளர்த்த அங்கங்களை வர்ணித்து புகழ்தல்.....

இல்லை

காதலியின் உடல் வெப்பநிலையை அடிக்கடி பரிசோதித்து மருந்து கொடுத்தல்.....

இல்லை

காதலியை மடியில் படுத்தி பேன் இருக்கும் இடத்தில் சொறிந்து விடுதல்.....

இல்லவே இல்லை

காதலனுக்கு அழகு காதலன் என்ற நிலையில் மட்டும் இருந்து காதலை பேணுதல்.....




இந்து சமயத்தவனுக்கு அழகு எது ?

நெற்றியில் பட்டை அணிந்து கோவிலை முப்பது தரம் சுற்றுதல்.....

இல்லை

நூற்றெட்டு கோவில் சென்று அர்ச்சனை செய்தல்....

இல்லை

கடவுள் படத்தை வீடு எங்கும் மாட்டி வைத்தல்....

இல்லவே இல்லை

இந்து சமயத்தவனுக்கு அழகு தான் எப்பவும் இந்து சமயத்தவன் என்பதை மறவாது இருத்தல்.....




தமிழ் வானொலிக்கு அழகு எது ?

நேயர்களிற்கு பரிசுகளை அள்ளி வழங்குதல்.....

இல்லை

இருக்கின்ற மூன்றுக்குள் போட்டியிட்டு முன்னுக்கு வருதல்.....

இல்லை

நேயர்களின் சுக நலங்களை திருப்ப திருப்ப விசாரித்தல்.....

இல்லவே இல்லை

தமிழ் வானொலிக்கு அழகு பழமை வாய்ந்த தமிழ் மொழியை கொல்லாமல் இருத்தல்.....




பெண்ணுக்கு அழகு எது ?

அங்கமெல்லாம் தங்க நகைகளை தொங்க விடுவது .....

இல்லை

அங்க அசைவுகளை பகிரங்கப்படுத்தும் ஆடை அணிவது.....

இல்லை

படித்து பட்டம் பெற்று பணம் சம்பாதிப்பது....

இல்லவே இல்லை

பெண்ணுக்கு அழகு அடங்க வேண்டிய இடத்தில் அடங்கி அடக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாழ்வது....




வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் வருக.

Thursday, February 4, 2010

காதல்...காதல்...காதல்...காதல்...காதல்...

நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . தேர்தல் காலம் என்பதால் வீட்டுக்கு சென்றதால் பதிவு போட முடியவில்லை. இந்த பதிவிலே இந்த காதல் என்ற சாமன் இருக்குதானே அதை எப்படி எல்லாம் விபரிக்கலாம் அது வந்தால் என்ன என்ன நடக்கும் என்று என் மனதில் உதித்ததை உங்களுடன் பகிருகின்றேன்.பதிவு ஒன்று போட வேண்டும் என்று அவசரமாக உடனே எழுதி போட்டது. படித்து பாருங்கள்.




காதல் (ஒரு சொல்லில்) :-

உணர்ச்சி


காதல் (இரண்டு சொற்களில்) :-

காமத்திற்கான நுழைவாயில்


காதல் (மூன்று சொற்களில்) :-

இரண்டு இதயங்களும் கலக்கும்


காதல் (நான்கு சொற்களில்) :-

கவர்ச்சிக்கு அடுத்து காமத்துக்கு முன்


காதல் (ஐந்து சொற்களில்) :-

சொல்லாமல் வருவது ஆனால் கொல்லாமல் போகாதது


காதல் (ஆறு சொற்களில்) :-

ஊடுருவும் போது இனிப்பு ஊடுருவிய பின் உறைப்பு





காதல் (ஏழு சொற்களில்) :-

கடவுளால் உயிரினத்துக்காக படைக்கப்பட்டது இன்று மனிதனின் சிறைக்குள் சிக்கித்தவிக்கிறது


காதல் (எட்டு சொற்களில்) :-

அழகைக் கூட்டும் பொழுதைக் கழிக்கும் ஓமோன்சுரப்புக்களை பெருக்கும் உறவுகளை பிரிக்கும்


காதல் (ஒன்பது சொற்களில்) :-

உருவமற்ற பேய் இது பிடித்து விட்டால் இரவு பகல் தெரியாமல் அலையும்


காதல் (பத்து சொற்களில்) :-

மின்னல் போல் இடைக்கிடையே தோன்றி மறைய காமம் மட்டும் இடியாக சிறிது நீடிக்கும்


காதல் (பதினொரு சொற்களில்):-

சாதி மதம் குலம் அறியாது நுழைந்து நன்றாக வளரும் போகும்போது அதில் ஒன்றை தூக்கிப்பிடிக்கும்


காதல் (பன்னிரண்டு சொற்களில்):-

உதட்டின் ஈரலிப்பை கூட்டும்
கைகளின் வலிமையை அதிகரிக்கும்
நெஞ்சை நிமித்தி காட்டும்
கண்கள் செய்வதறியாது துடிக்கும்






நண்பர்களே என்னுடைய பதிவை வாசித்ததுக்கு நன்றிகள் . மீண்டும் இன்னொரு வித்தியாசமான பதிவோடு சந்திப்போம்.

Tuesday, January 19, 2010

இவைகளுக்கும் பேச தெரிந்தால் இப்படிதான் பேசுமா..........

நண்பர்களே மீண்டும் ஒரு முறை கருணையூரானின் வணக்கம் . நீங்கள் எல்லாம் நன்றாக பேசுவிங்க, நன்றாக வாதிடுவிங்க , நன்றாக சிரிப்பிங்க . ஆனால் உயிரற்ற சில பொருட்கள் மற்றும் சில உணர்சிகள் பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா . கீழே வாசித்து பாருங்கள் . சற்று ஆழமாக சிந்தியுங்கள்.





முதலாவதாக காதல் , காமம் இரண்டும் சந்தித்து பேசினால் எவ்வாறு இருக்கும்

காதல் :- ஏய் காமம் ! எதற்காக நான் இருக்கும் இடமெல்லாம் நீயும் வருகின்றாய். உனக்கு வெட்கம் இல்லையா ?

காமம்:- ( சற்று கோபத்துடன்) நான் இல்லாமல் நீ தனித்து வாழ முடியுமா ? நான் வந்திருக்காவிட்டால் நீ வந்திருப்பியா ? ஆனால் நீ இல்லாமலும் நான் வாழ்வேன்

காதல் :-நீயும் ஒரு கொல்லாமல் கொல்லும் சர்வாதிகாரிதான் .என் இடத்தினுள் புகுந்த நீ இப்போ " நட்பு " என்று பல இடங்களில் புகுந்து விட்டாயே

காமம்:- ( ஆணவச் சிரிப்புடன் ) நான் கத்தரிக்காயிலும் இருப்பேன் புடலங்காயிலும் இருப்பேன் நீ யார் கேட்பதற்கு ?

பின்னை பாருங்கோவன்





அடுத்ததாக நட்பு , காதல் , காமம் , கல்யாணம் , மரணம் இவைகளின் ஒரு திருவிளையாடல் எப்படி இருக்கு என்று பாருங்கள்

நட்பு ஒரு இடத்தில் நீண்ட காலமாக குடிகொண்டிருந்தது. அந்த வழியால் வந்த காதல் நட்பு இருந்த இடத்திற்கு சென்றது :-

காதல் :- நட்பே நட்பே ! சிறிது காலம் உன் வீட்டில் இருந்து விட்டு போகலாமா ?

நட்பு :- அதுக்கென்ன , அந்த மூலையில் சற்று இருந்து விட்டு செல்.

அந்த வழியால் வந்த காமம் இதனை அறிந்து நட்பின் இடத்துக்கு சென்றது

காமம் :- நட்பே நட்பே ! சற்று களைப்பாக இருக்கிறது .சற்று இருந்து விட்டு செல்லலாமா ?

நட்பு :- அதுக்கென்ன மற்ற மூலையிலே சற்று இருந்து விட்டு செல்

மீண்டும் செல்லாமல் அவ்வாறே குடிகொண்டன காதலும் காமமும் . பல காலம் சென்ற பின் கல்யாணம் அங்கு புகுந்து கேட்டது

கல்யாணம் :- நானும் இங்கு வந்து இருக்கலாமா ? அப்படி என்றால் யாரை கேட்க வேணும்

காமம் :- நான் தானே இப்படி ஒரு இடம் இருக்கு . இங்கே வந்தால் இருக்கலாம் என்று கூறினனே

காதல் :- இல்லை இல்லை என்னை தான் கேக்கணும். நான் தான் இங்கே பெரிய ஆள்

நட்பு :- ஐயோ என்ர ஐயோ என் வீட்டுக்குள் வந்தே என்னையே மறந்திட்டிங்க. எனக்கு ஒரு மூலை இடம் தாங்க நான் இருந்திட்டு போகிறேன்

இவர்களின் சத்தத்தை வீதியால் சென்றுகொண்டிருந்த மரணத்துக்கு கேட்டுவிட்டது.அங்கே வந்த மரணம்

மரணம் :- யார் எல்லாம் நீங்கள் , இவை எல்லாம் எனக்கு சொந்தமான இடங்கள் .நீங்கள் எல்லாரும் வந்தேறியகுடிகள் தான் .புறப்படுங்கள்







அடுத்ததாக கடவுளிடம் ஒரு மனிதன் பேசுகின்றான்

மனிதன் :- கடவுளே !

பூவுக்குள் தேனை வைத்தாய்
அதை தேனீக்கு சொல்லி வைத்தாய்......

கல்லுக்குள் ஈரத்தை வைத்தாய்
அதை தேரைக்கு சொல்லி வைத்தாய்......

சிற்பிக்குள் முத்தை வைத்தாய்
அதை மனிதனுக்கு சொல்லி வைத்தாய்......

என்னுள் என்ன வைத்தாய்
அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......

கடவுள் :- ( சிரித்தவாறே ) தேனீயோ தேரையோ எல்லாம் தேடல் மூலம் தான் கண்டுபிடித்தன .நீயும் உன்னுள் இருப்பதை முதலில் தேடு வாழ்வில் வெற்றி பெறுவாய்

மனிதன் :- தேடல் மூலம் நூற்றெட்டு கடவுளை கண்டுபிடித்து இவ்வாறு கேட்டு அலுத்துவிட்டேன் . இன்னும் தேடல் தான் என் வாழ்க்கை என்றால் இன்றிலிருந்து மரணத்தையே தேடுகின்றேன்

கடவுள் :- ( நக்கல் சிரிப்புடன் ) மரணத்தை நீ தேட தேவை இல்லை அது தானாக தேடி வரும் .





அடுத்ததாக நிலாவும் மனிதனும் பேசுகின்றார்கள்


மனிதன் :- நிலாவே ! இவ்வளவு அழகாக இருக்கின்ற நீ எதற்காக அழுக்கு நிறைந்த பூமியை காதலித்து சுற்றிக்கொண்டிருக்கின்றாய்

நிலா :- இல்லை இல்லை நீ இங்கே வந்து பார் எவ்வளவு அழகாக இருக்கிறதே பூமி அதுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்

மனிதன்:- ஓகோ அப்படியா ! வேண்டாம் நான் அங்கு வந்தால் உன் மீது நான் கொண்ட காதலும் வெறுப்படையலாம் . நானும் இங்கிருந்தே உன்னை காதலிக்கின்றேன்