Saturday, August 7, 2010

வன்னியில் ஒரு மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள்

நண்பர்கள் அனைவருக்கும் மிக மிக நீண்ட நாட்களின் பின் கருணையூரானின் வணக்கங்கள் . இந்த பதிவு வன்னியில் மீளக்குடியமர்ந்து குடிசையில் வாழும் ஒரு உயர்தர மாணவியின் வாழ்க்கையில் ஒரு நாள் இடம்பெற்ற சம்பவங்களை உரையாடல் மூலமாக தந்துள்ளேன் . அவருடைய பெயர் மதி.அவர் குடிசையில் அம்மா , அண்ணாவுடன் இருக்கின்றார்.அண்ணா அங்கம் ஒன்றை இழந்து வீட்டில் சுயதொழில் செய்கின்றார்.மதி கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தர கலைப்பிரிவில் கற்கின்றார். முக்கியமான விடயங்களை சுருக்கமாக தந்துள்ளேன்.




அதிகாலையில்.......


அம்மா :- மதி! எழும்பு....விடிஞ்சிட்டு....பெட் சீட்டை விடு மடிச்சு வைக்க....ஆமிக்காரர் கிணத்தடிக்கு வர முன் போயிட்டு குளி..... (ஓகோ.....அப்ப ஊருக்கே ஒரு கிணறா இருக்கு)

மதி :- பொறன எழும்பிறன்.

அம்மா :- குளிக்கேக்க அந்த ரண்டு பயித்தம் கொடிக்கும் தண்ணி ஊத்தி விடு......


மதி எழுந்து பல் விளக்க போகின்றாள்


மதி:- அம்மா பற்பொடி முடிஞ்சுதா ?

அம்மா :- ஓ ..அந்த கல்லில கரிக்கட்டி வைச்சனான் எடுத்து விளக்கு இல்லாட்டி அண்ணா வேப்பம்தடி முறிக்கிறான் ...வாங்கு... ( ம்..இப்படியும் இருக்கு சனம்)

மதி:- அம்மா ! என்ர வலது கால் செருப்பை காணல

அம்மா:- பிறகு வந்து தேடிப்பார் ..இப்ப அண்ணாக்கு வாங்கின செருப்பின்ர வலது கால் சும்மாதானே இருக்கு எடுத்து போடு.... ( ஓகோ ....காலியானது காலா )

மதி:- இண்டைக்கு அக்காவை பாக்க போறியா ? ( இது வேறையா ?)

அம்மா:- ஓ போறன் ...நான் கறி வைச்சிட்டு போறன் ..நீ வந்து அரிசியை போட்டு இறக்கு...

மதி:- ஐயோ ! எனக்கு கல்லரிக்க தெரியாது. நீங்க போட்டுட்டு போங்க (கல்லோட அரிசி ...ம் ...புரியுது யார் தந்தது எண்டு)

அம்மா:- நீ அந்த அரிசியை விட்டுட்டு பெரியம்மா கொண்டுவந்த அரிசில ஒண்டரை சுண்டு போடு


அவ்வாறே மதி புத்தக பையை எடுத்துகொண்டு வீட்டுக்கு முன்னால் பஸ்ஸுக்காக காத்திருக்கின்றாள் .அருகில் பரண் கட்டி காவல்புரியும் ஆமிக்காரன் ( என்ன மதி வீட்டுக்கு காவலா ?) மதியோடு கதை தொடுக்கின்றான்.




ஆமி :- தங்கச்சி ஸ்கூல் போறது.நல்லா படிக்கிறது . சரியா ......என்ன தங்கச்சி இப்ப குளிக்க வாறது இல்ல ...குளிக்கிறது இல்ல தானே ....( என்ன ஒரு அக்கறை )

மதி:- நான் இப்ப இரவு தான் குளிக்கிறனான்( குழந்தை மனசு போல )

ஆமி :- தங்கச்சி உங்க செருப்பு , உடுப்பு நாய் கொண்டுவந்து போட்டிருக்கிறது. நாங்க அதை உள்ளே எடுத்து வைச்சிருக்கிறது. வந்து எடுக்கிறது இப்ப ....என்ன யோசிக்கிறது ..பயம் வேண்டாம் ..நாங்க பிடிச்சு கொண்டு போறதில்ல. ( பிடிச்சு கொண்டு போகமாட்டிங்க ..பிடிச்சு பிடிச்சு விடுவிங்க தானே )

மதி:- பஸ் வருது . போகும் போது வாறன் .


வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி நெரிசலாக வந்த பஸ்ஸில் ஏறி நுழைகின்றாள் மதி. அப்போது திடீரென்று ஒரு பெண்ணின் காரசாரமான சத்தம்........


பெண் :- என்ன பிள்ளை ! காலை மிரிக்கிறாய்..கால் ல பிளேட் வெட்டி புண் எண்டு மருந்து கட்டி இருக்கிற தெரியலயா..பஸ்ஸில போனதில்லையா ..பழக்கவழக்கம் தெரியாதா ?எங்கை இருந்து வருதுகளோ .... ( ஓ அம்மா ! புரியுது நீங்க யாழ்ப்பாணம் தான் போறிங்க எண்டு ...கவனம் காயம் ..மருந்து போடுங்க வடிவா )


பயத்துடன் சத்தம் போடாமல் ஒதுங்கி நிக்கின்றாள் மதி.. அந்த பெண்ணோ ...
கையில் தொலைபேசி ...நெற்றியில் சிவத்த ஒட்டுப்பொட்டு ...அழகாக தலை வாரி விரித்துவிடப்பட்டிருந்தது. ( ம்.... உன்னை சொல்லி குற்றம் இல்லை ..)


மதி பஸ் நடத்துனரிடம் காசை கொடுக்கின்றாள் .


நடத்துனர் :- சில்லறை இல்லை தங்கச்சி ..மிச்சம் பிறகு கேளுங்க .( அட பாவிங்களா இவங்களோடையும் இப்படியா ....கிடைச்ச மாதிரிதான்)


அவ்வாறே மதி கிளிநொச்சியில் பஸ்ஸில் இருந்து இறங்கி பாடசாலை நோக்கி அண்மிக்கின்றாள் . அப்போது வீதியில் சற்று வாகன நெரிசல். வீதிக் கரையில் இராணுவ வீரர்கள் குழுமி நிக்க பெரியவன் ஏதோ நட்டுக்கொண்டிருந்தார் . வேடிக்கை பாத்துக்கொன்டிருந்த மாணவர்களுடன் மதி இணைந்தாள் .


ஆம் ....அது மர நடுகை விழாவாம் . அங்கே அரச மரம் நடப்பட்டு கூடு கட்டப்படுகிறது.( அரோகரா ...முறிகண்டி பிள்ளையாருக்கு அரோகரா) அவ்வாறே பெரியவன் மாணவர்களிற்கு ஏதோ சாப்பிட கொடுத்தவாறே..........


ஆமிப்பெரியவன் :- தம்பி தங்கச்சி மாரே இதை தண்ணி ஊத்தி நீங்க தான் வளர்க்க வேண்டும் . பெரிசா வந்தா நல்லம் தானே .நிழல் தரும் .விளையாடலாம் . இளைப்பாறிப் போகலாம். ( புத்த பகவான் பாதையால வந்தா அப்படியா ஒரேயடியா இளைப்பாறிடுவர்)


அவ்வாறே பாடசாலையினுள் நுழைகின்றாள்.தன்னுடைய வகுப்பறையினுள் சென்று இருக்கின்றாள் .

வகுப்பறையோ..........




ஓட்டைகள் உள்ள நான்கு சுவர்கள் ....கதவு இல்லை நிலை இருக்கு....சீட் இருக்கு ஆனால் சிலாகை இல்லை......சுவர்களில் " பண்டார " , " சுனில்" , "தம்மித" என ஆங்கில , சிங்களங்களில் எழுதப்பட்டிருந்தது . மேசையிலும் ஏதோ எழுதப்பட்டிருந்தது ஆனால் தெளிவற்று இருந்தது . அதாவது
"புலி தாக தம தா " என இருந்தது . ( நான் நினைக்கிறன் " புலிக்கு தாகம் என்றால் தடாகத்துக்குள் தாவும் " என இருக்கலாம்)


ஆசிரியர் வகுப்புக்கு வருகின்றார்.இவர் கல்வியற் கல்லூரியில் ஆரம்ப பிரிவில் கற்று அண்மையில் ஆசிரியராக நியமிக்க பட்டவர். தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போபவர்( பாவம் மனுசன் ..என்ன அக்கறை ..அங்கை இருந்து வருது) . இங்கே உயர்தரத்துக்கு லொயிக் படிப்பிக்க விடப்பட்டுள்ளது,.வழ்மைபோல் பெறாமகளின் 10 நோட்ஸ் கொப்பிகளுடன் வருகின்றார் .( என்ன படிப்பிக்கவோ ? இல்லை படிக்க வாறாரோ? )

சேர்:- சரி நாங்க இண்டைக்கு மிச்சத்தை பாப்பம் . ....இப்ப உதாரணம் சொன்னால் ..." பால் வெள்ளை நிறமானது ஆனால் வெள்ளை நிறம் எல்லாம் பால் இல்லை " ...என்ன மதி விளங்குது தானே ? நீ ஒரு உதாரணம் சொல்லு பாப்பம் ...

மதி :- உதாரணமா ...... " செல் எல்லாம் விழுந்து வெடிக்கும் போது டும் சத்தம் கேக்கும் ஆனால் டும் சத்தம் வரும் போது வெடிப்பது எல்லாம் செல் இல்லை " சரியா சேர் ? ( பிள்ளை இன்னும் மறக்கலயா ...எப்படி மறக்கிற என்ன )

சேர்:- ம் ( தலை ஆட்டுகின்றார்) ( ஆட்டத்தான் தெரியும் )

மதி :- சேர் ! லொயிக் பேப்பரில எத்தனை கேள்வி செய்யணும்

சேர் :- ஏன் அவசரப்படுகின்றாய் ..பேப்பரில பாத்திட்டு சொல்லுறன் . சரி பிள்ளைகள் நான் தூரம் போகணும் மிச்சத்தை பிறகு பாப்பம்.( என்ன சேர் நீங்க அப்ப A/L யும் லொயிக் படிக்கலயா ? முறிகண்டியானே இது எங்கை போய் முடியபோகுதோ)

மதி :- ஏன் சேர் ...நீங்க கிட்ட வந்து இருக்கலாம் தானே ...

சேர் :- சீ..சீ... கஷ்ரம் ..இங்க வசதிகள் காணாது . நல்ல தண்ணியும் இல்லை . A9 றோட் தூசும் ஒத்து வராது.( கஷ்ர பிரதேச படி எண்டு தந்தால் பல்லை இழிச்சு கொண்டு வாங்குவம் என்ன சேர்)


அன்றைய பாடசாலையை முடித்துவிட்டு பஸ் எடுத்து வீட்டு வாசலில் இறங்குகின்றாள். அவளின் செருப்பு , உடுப்பு ஆமிட்டை இருப்பது ஞாபகம் வருகிறது. ஆமியும் கணக்காக


ஆமி :- தங்கச்சி உள்ளே வந்து எடுக்கிறது .

மதி :- நீங்க எடுத்து தாங்க

ஆமி :- பயம் வேண்டாம் ...நான் மேலே நிக்கிறது தானே ..நீங்க போய் எடுக்கிறது .(அதுதானே ....)

உள்ளே நுழைந்த அவளை சாப்பிட்டுக் கொண்டிருந்த இன்னொரு ஆமி வரவேற்றான்.( இது அவளுக்கு தெரியாம போயிட்டுதே )

சிறிது நேரத்தின் பின் ஏதோ பேய் பிடித்த போல் செருப்பு , உடுப்புடன் குடிசைக்குள் நுழைகின்றாள் . ( பேய் பிடிச்ச போலவா ? ஏனாக இருக்கும் ? )

ஏதோ வேலை செய்துகொண்டிருந்த அண்ணன் அவளை பார்த்து ...

அண்ணா :- என்னடி ! சட்டை எல்லாம் மஞ்சள் , சிவத்த கறை பிரண்டு இருக்கு ? (யோசிக்க வேண்டிய விசயம்)

மதி :- அது இண்டைக்கு பள்ளிகூடத்தில ஆமி சாப்பாடு தந்தவங்க.அதில மஞ்சள் பருப்பும் பீற்றூட்டும் சாப்பிட்டன் அதான் கறை வந்திட்டுது போல........(ஓகோ ! இங்கயும் இதான் சாப்பாடோ ? ).... ஏதோ.....அவள் அடுப்பை மூட்டி உலை வைக்கின்றாள்.....................

இது தொடருமா ?

என்னடா இவன் கதை எழுதிட்டு எங்களை கேக்கிறான் எண்டு யோசிக்கிறிங்களா?

நன்றாக வாசியுங்க ......

மீண்டும் கேக்கிறன்

இது தொடருமா ?

நண்பர்களே இவை யாவும் கற்பனையே ...ஆனால் சில உண்மை விசயங்களுக்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.........பொறுமையாக முடிவுவரை வாசித்ததுக்கு நன்றிகள்..........

8 comments:

Tharshy said...

:( நல்ல சிந்தனை.... வாழ்க்கைல எத்தினையோ விசயங்கள் மாறினாலும் சிலது மறக்கபடுறதில்லை.... எழுத்துக்கு சக்தி கூட எண்டு காட்டிற்றீங்க...

பால்குடி said...

வரிக்கு வரி வாழ்க்கையின் வலி புரிகிறது. உங்களுடைய நடையிலே அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

கருணையூரான் said...

கொற்றவை , பால்குடி ...நன்றிகள் உங்கள் பின்னூட்டத்துக்கு..................

வடலியூரான் said...

சிலுவை சுமந்த சனம் இன்னும் சிலுவை சுமக்கின்றது.அவர்களது வேதனைகளை உங்களைப் போல ஒரு சிலராலேயே உணரமுடியும் கருணையூராரே....

கார்த்தி said...

உண்மைகள் பலவற்றை சொல்லியிருக்கிறீர்கள். சொகுசு வாழ்க்கை வாழும் ஜடங்களுக்கு எழுத்தின் புலம்பலும் உண்மையின் அழுகையும் விளங்கியிருக்காது.

கருணையூரான் said...

நன்றிகள் கார்த்தி

ம.தி.சுதா said...

சகோதரா அழுத்தமான சில விடயத்தை தமது வழமையான பாணியில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.. என் பதிவுகளைக் காணவில்லை...

கருணையூரான் said...

நன்றிகள் மதி சுதா விரைவில் எதிர்பாருங்கள்

Post a Comment