Tuesday, December 22, 2009

ஏழைக்குடிசை நோக்கி ஒரு அணி.......

வயற்கரை ஓரத்தினிலே
வரம்பு ஒரு கரையினிலே
வாடைக்காற்று புகுந்து விளையாடும்
வரிச்சு மட்டைக் கொட்டில் அது............


ஒரு கரையிலே நாலு சுள்ளி விறகுகள்
ஒரு கரையிலே நாலு குட்டி போட்ட ஆடு
ஒரு கரையிலே பாகற்கொடி படரும் படலை
ஒரு குடும்பம் நடுவிலே நாலு பிள்ளைகளோடு அது...........


மல்லாந்து படுத்திருக்கும் தந்தை
மல்லி சம்பல் அரைக்கும் மூத்த மகள்
மடியில் கடைக்குட்டியை தாலாட்டும் தாய்
மழை வெள்ளத்தில் கப்பல் விடும் மகன்கள் ..............


கார்மேகம் இடி இடிக்கும் நேரம் அது
வாய்க்கால் நீர் வழு வழுக்கும் நேரம் அது
ரோமங்கள் சிலிர் சிலிர்க்கும் நேரம் அது
குழந்தைகள் பசியால் துடி துடிக்கும் நேரம் அது...........


பச்சை உடுப்போடு பத்து பேர் சுத்தி வர
பனை உயரத்தில் அப்பாவி மூஞ்சை ஒருவன் முன்னால் வர
பக்கத்திலே இருவர் பறை அடித்து வர
பச்சை வயல் நடுவினிலேயே பசுமையான அணி அது..........


வயற்கரை கொக்கெல்லாம் மேலுந்து வட்டமிட
வந்தவர் அங்கெல்லாம் கூடியிருந்து திட்டமிட
ஒருவர் அதற்குள் மேலெழுந்து சட்டமிட
சதுப்பு தண்ணிக்குள்ளேயே நீந்துகிறது அன்னப்பறவை அது........


தூறல்கள் உடலை மெல்ல நனைக்க
அப்பா படலையை மெல்ல திறக்க
வந்தவர் மடலை மெல்ல கொடுக்க
அப்பாவும் ஏதோ சொல்ல நினைக்கும் நேரம் அது.........


கொச்சை தமிழில் "வணக்கம்" ஒன்று
பச்சை கடுதாசியில் கடிதம் ஒன்று
நெஞ்சை தொடுகின்றது கைகள் இரண்டும்
மூஞ்சை மூஞ்சைகள் மூஞ்சைகளோ ...வேணாம் அது......


அது வேணும்...ஓ...அதுவும் தாறம்
இது வேணும்...ஓ...இதுவும் தாறம்
உது தெரியும்...ஓ...உதுவும் தெரியும்
உப்படித்தான் போகணும்...ஓ..உப்படியே போங்க...அது.....


சதுப்பு தண்ணிக்குள் தத்தளித்த அன்னம் எங்கே ?
அட அதுக்குள்ளேயே ? காணலயே ?
மீண்டும் தரை இறங்குறது கொக்கு
புகை விட்டபடி பறக்கிறது அன்னம்..........


"அப்பா அன்னம் எங்கே" என்கிறான் மகன்
"அது திரும்ப வந்தாலும் வரும் வராமலும் போகலாம்"
"நீ உன்ர வேலையை பாரு"
"வெற்றிலை தட்டு எங்கே" என்கிறார் அப்பா .........


------------------------------------------------------------------------------------


இது அடுத்த பதிவு பற்றிய ஒரு தகவல்

நண்பர்களே !
வெள்ளவத்தையில் தற்கொலை செய்த ஒரு பெண்ணின் நாட்குறிப்பேடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அது தற்போது நக்கல் நடராசுவிடம்
அவரின் நக்கல் எழுத கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பதிவில் இருந்து அவற்றுள் முக்கியமானதை ஒரு தொடராக பதிவு செய்யவுள்ளேன் .....எதிர்பார்த்திருங்கள்....

Wednesday, December 16, 2009

வருங்கால யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்க்குடும்பம்

இது எதிர்வரும் சில வருடங்களின் பின் யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் நிலையை எதிர்வு கூறும் ஒரு பதிவு. நெல்லியடியில் வசித்து வரும் ஒரு சிறிய குடும்பத்தின் உரையாடல் மூலமாக சுருக்கமாக உங்களிற்கு தந்துள்ளேன்.ஒரு விடுமுறை நாளில் பொழுதைக் கழிப்பதற்காக கசூர்னா கடற்கரைக்கு செல்கின்றனர் இந்த குடும்பம். குடும்பத்தில் அம்மா , அப்பா , மகன் பெயர் சைலேஷ் ,மகள் பெயர் திரேசியா (எங்கை இந்த பெயரை தேடிப்பிடிச்சாங்களோ). சைலேஷ் தரம் 8 , திரேசியா தரம் 10, (இரண்டா...ம்...கொஞ்சம் படிச்சவங்க போல) ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கின்றார்கள்.(தமிழை ஒரு பாடமா எடுக்க மறக்காதிங்க)

அம்மா :- சைலேஷ் , என்ன செய்யுறாய் ? வெளிக்கிடன்...நேரம் ஆகுது...

மகன் :- பொறுங்கம்மா ...மாற சீன் ஒண்டு...என்ர Facebook ல வெள்ளைக்காரி போல Friend Request பண்ணி இருக்கு...( அட பாவிங்களா இப்பவே Facebook கு வந்திட்டீங்களா)

மகள் :- ஐயோ ! இல்லையடா தம்பி ,உது என்ர Friend (கடவுளே !இப்படியும் சந்தேகம் வர தொடங்கிட்டா)

மகள் :- அம்மா ! நான் எந்த Dress போடுற...தோய்ச்சுப் போட்ட அந்த Black Denim இன்னும் வடிவா காயல்ல ( எதைப்போட்டா என்ன எத்தனை போட்டா என்ன...)

அம்மா :- ஏன் ? அந்த White Denim ஐ போடன்...இந்த Black T Shirt கு நல்லா இருக்கும் (அப்படியெல்லோ இருக்கணும் அம்மா எண்டா)

அப்பா :- என்ன தாயும் மகளும் ஒரே மாதிரி Dress , ஒரே மாதிரி Hair Style..பின்னால பாக்க வித்தியாசமே தெரியல ( எனக்குப் புரியுது..ஆனால் அம்மாக்கு புரியணுமே...)

அம்மா :- போங்க நீங்க வேற ...நீங்க தானே சொன்னிங்க Straight பண்ணிணா நல்ல இருக்கும் எண்டு...

அப்பா :- நான் எங்கை சொன்னான்...நீதானே திரேசியாக்கு நல்லா இருக்கு நானும் செய்யட்டா எண்டு கேட்டாய்... (உண்மையா திரேசியாக்கு தான் நல்லா இருக்கோ...இல்லை...)

மகன் :- சரி சரி... அம்மாக்கும் அக்காக்கும் வடிவாதான் இருக்கு ...சரி போவம் நாங்க...( அட நீயுமா)

அப்பா :- ம்...சரி ...எல்லாரும் உங்க Phone , IC எல்லாம் எடுத்தாசா ? (அட இந்த IC கொண்டு போற இன்னும் விடல்லயா)

அவ்வாறே பேசிக்கொண்டு நெல்லியடி பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கின்றனர்.

அம்மா :- என்ன திரேசியா Phone ஐ அமத்திக் கொண்டே வாராய் ( விடுங்கப்பா...Phone ஐ தானே அமத்திசு)

மகன் :- ஓம் அம்மா இவ எப்பவும் Phone தான் (பொறு தம்பி பொறு...)

மகள் :- போடா பிசு ...இல்லை அம்மா நான் இண்டைக்கு Class வரமாட்டன் எண்டு Sir கு SMS போடுறன் அம்மா...( வாத்திமாருக்கு நுங்குதான்)

அப்பா :- நீங்க போங்க ...நான் Cargills ல போய் Bill கட்டிட்டு வாறான்.

மகன் :-அப்பா என்ர Phone கும் கட்டிவிடுங்கபா ( ம்...விடாதே விடாதே)


அவ்வாறே பேசியபடி பஸ்ஸுக்காக காத்திருக்கின்றார்கள்.

மகன் :- அப்பா "யாப்பனய" எண்டு Board போட்டு பஸ் ஒண்டு வருது போல ஏறுவம்.

அம்மா:- ஓமப்பா நிண்டு பாக்கேலா ஏறுவம்.

அனைவரும் அந்த வண்டியில் ஏறுகின்றனர்.கடைசி ஆசனத்தில் திரேசியாவின் நண்பி தமிழரசி தன்னுடைய காதலன் அப்துல்லாவுடன் இருப்பதைக் திரேசியா காண்கின்றாள்.

மகள் :-அம்மா இதுதான் நான் சொன்னன் அந்த Girl தமிழரசி , அது அவட Boy Friend அப்துல்லா...( தமிழரசி தாடி ரொம்ப பிடிக்குமோ...அப்துல்லா உன்னை சொல்லி குற்றம் இல்லை...)

அம்மா:- எங்கை போறிங்க பிள்ளை ( கஷ்ரப்பட்டு கடைசி ஆசனம் பிடிச்சு வர நீங்க வேற ....முன்னுக்கு போங்க அம்மா)

தமிழரசி:- படம் பாக்க போறம் ( எங்கை போனாலும் ஒண்டு தானே )

மகள் :- நாங்கள் கசூர்னா Beach கு போறம்

தமிழரசி:- நான் Night உனக்கு அடிச்சன் உன்ர Phone Waiting ல இருந்திச்சு.

மகள்:- மெல்லமா கதை அம்மா இருக்கா...நான் பிறகு சொல்றன்.(அம்மாவும் முந்தி உப்பிடிதான் நீ சொல்லு பிள்ளை)


அவ்வாறே பஸ் வல்லை நகரை தாண்டுகிறது.அப்பா நடத்துனரிடம் பஸ் Radio ஐ போடும் படி கேக்கின்றார். நடத்துனரும் Radio ஐ இயக்குகின்றார்.

அப்பா :- என்ன தம்பி ..ஐயோ இவங்க "முதல் தரம்" "முதல் தரம்" எண்டு சொல்லியே உயிரை எடுத்திடுவாங்க ( அட இந்த சண்டை எப்ப தான் முடியப் போகுதோ)

மகன் :- அந்த வெற்றில விடுங்க லோஷன் Uncle ர மகன் செய்யுற நிகழ்ச்சி இப்ப ( என்ன மகனுமா )

நடத்துனர்:- இல்லை தம்பி ...அவங்க எனக்கு ஒரு DVD Player தந்திருக்காங்க..அந்த நன்றிக்கடன் வேண்டாமா..( அவுஸ்ரேலிய வானொலில அரைக் கொத்து அரிசி கொடுக்கிறாங்களாம்...விசாரிச்சு பாருங்க...)

அப்பா :- அப்ப நன்றிக்கடன் மட்டும் தானா இது ...ம்...


அவ்வாறே பஸ் புத்தூரை அடையும் போது வாகன நெரிசல் ஏற்படுகின்றது.மக்கள் கூட்டம் குவிந்து வேடிக்கை பாக்கின்றது

அப்பா :- என்ன நடந்தது ?

நடத்துனர் :- அது ஏதோ Accident...மாத்தறை ஆள் யாரோ செத்திட்டாங்களாம்.

பஸ் தொடர்ந்து செல்கிறது. நகரை அண்மிக்கும் போது மீண்டும் வாகன நெரிசல்...

நடத்துனர் :- அது அவங்கட பெரெரா போகுது அதான்...( புத்த பகவனே ! அரோகரா...)

இது இவ்வாறு இருக்க மகன் சத்தம் போடாம தன்னுடைய வேலையை பாத்துக்கொண்டிருந்தான், அவன் தீடீரெண்டு ஒரு பத்து ரூபாய் எடுத்து ஏதோ எழுதி யாருக்கும் தெரியாம இரண்டு பத்து ரூபாய் தாளை அருகில் இருந்த பெண்ணிடம் கொடுக்கின்றான். அவளும் அதற்கு பதிலாக ஒரு இருபது ரூபாய் எடுத்து எதோ எழுதிக் கொடுக்கின்றாள். ( அட விடுங்கப்பா... காசு மாத்தி இருக்காங்க போல)

யாழ் நகரை வந்தடைகின்றனர்.

மகன் :- அம்மா தண்ணி விடாய்குது. Kiri Packet ஒண்டு வாங்கி தாங்க.( இந்த சாமான் இங்கயுமா)

அம்மா :- பொறு அந்த முஸ்லிம் கடைல இருக்கும் குடிப்பம்

மகள் :- அப்பா அந்த English பட DVD வாங்கி போவமா ( வாங்கி கொடுங்கப்பா ஆங்கில அறிவு கூடும் தானே)

அப்பா:- அங்க வாங்கி வைச்சிருக்கிற பாக்கவே நேரம் இல்லை...(இது வேறையா)

மகன் :- அம்மா அங்கை , என்ர Class ல படிக்கிற கஷ்ரின் போறான்.

அம்மா :- பிறகு பாப்பம் ..வா ..நாங்க அடுத்த பஸ் எடுப்பம்.

அனைவரும் காரைநகர் பஸ் தரிப்பிடம் சென்று ஏறுகின்றார்கள். ஒரு மணித்தியால பயணத்தின் பின் காரைநகரை அடைந்து பிறகு நடந்து சென்று கசூர்னா கடற்கரையை அடைகின்றனர். விடுமுறையோ என்னவோ சனக்கூட்டம் நிறைந்து காணப்பட்டது

அம்மாவும் அப்பாவும் அமர்ந்தவாறே தம் பழைய காதல் நினைவுகளை மீட்டுகின்றனர். மகனும் மகளும் இயற்கையை ரசித்தவாறு நடக்கின்றனர்.

அப்பா:- என்னப்பா ! நாங்க அப்ப அந்த ஒழுங்கைக்க தானே நிண்டு கையைப் பிடிச்சு கதைச்சம். இப்ப பாருங்க...( அப்பா வேண்டாம் )

அம்மா:- ம்...அதுவும் எவளவு பயந்து பயந்து...

அப்பா:- (அப்பா, அம்மாவின் கூந்தலை தடவியபடியே ) கள்ளி உனக்கு எப்பவும் பயந்தான்...( விடுங்கப்பா , அம்மா இண்டைக்கு தான் முழுகி இருப்பா போல ...கூந்தல் வாசனை இழுக்குது போல...)

அம்மா :- ( அம்மா, மகன் , மகள் எங்கே என கடைக்கண்களால் தேடியவாறே) என்னப்பா இதுகள் இரண்டும் எங்கயோ போட்டுதுகள் போல

அப்பா:- இப்ப ஏன் உனக்கு அதுகளை ...ஆறுதலாக வரட்டன் ( உண்மையாதான் அம்மா முழுகி இருக்கா போல...பிறகென்ன நான் சொல்ல வேண்டுமா...)மகனும் மகளும் ஒரு புறம் கடலைப் பார்ப்பதும் கடைக்கண்களால் சூழலை நோக்குவதுமாக ......காதலர்கள் குடைக்கம்பிகளை எண்ணியபடியாக.......வியாபாரிகள் சிங்கள தமிழ் மொழிகளில் கத்திகொண்டே உலா வந்தனர்...தனியாக இருந்த திரேசியா ஐ அவதானித்த ஒரு வியாபாரி...

வியாபாரி:- (வியாபாரி , திரேசியாவின் உடல் முழுக்க கண்களால் மேய்ந்தபடியே)
தங்கச்சி வதுரு போத்தல் வேணுமா...ஏன் தனிய ஈக்கிறிங்க ( தண்ணி காட்ட வெளிக்கிட்டான் ...)

திரேசியா:- (மேற்சட்டையை சரி செய்தவாறே) நான் தனிய இருந்தா உங்களிற்கு என்ன ? ( விடுங்கப்பா...மேற்சட்டையை மேல இழுதால் கீழ...)

வியாபாரி:- இல்லை தங்கச்சி என்ர போன் ல சல்லி இல்லை . அவசரமாக ஒரு SMS போடணும் அதான்...( நல்லா புரிஞ்சிடாங்கப்பா)

திரேசியா:- அதுக்கென்ன போட்டுட்டு தாங்க .. ( அதுதானே இதில என்ன இருக்கு )

இனி சொல்லவேண்டுமா அவன் திரேசியாவின் இலக்கத்தை எடுத்திட்டான். இனி என்ன இரவு ஆரம்பிக்க கூடும்.

பின்னுக்கு ஒட்டி இருந்த மணலை தட்டியவாறே அம்மாவும் அப்பாவும் மகனையும் மகளையும் தேடுகின்றனர்.

மகன் சத்தம் போடாம இருந்து Phone Camera ஐ Zoom பண்ணி பண்ணி ஏதொ எடுக்கின்றான் ( அட விடுங்கப்பா ....இயற்கையை ரசிச்சு படம் பிடிக்கிறான்)

மகள் போனையும் அமத்தியபடியே அக்கம் பக்கம் பார்வைகளை விட்டபடியே இருந்தாள் .அம்மா அப்பா மகன் மகள் மீண்டும் இணைகின்றனர்.

மகன்:- எங்கை அம்மா இவளவு நேரமும் இருந்திங்க

அம்மா:- இல்லையடா ...அப்பாக்கு தலைக்கே ஒரே பேன் ஆக இருந்திச்சா அதான் பாத்திட்டு இருந்தன் ( அப்ப மகனுக்கு பேன் எடுக்கிற யாரு)

மகன் :-(மனசுக்குள் நினைக்கின்றான்) ஓகோ அப்படியா ....அப்ப இவளவு நேரமும் நான் படம் பிடிச்சது பேன் பாத்துக்கொண்டிருந்தவங்களைத்தானா

அப்பா :- சரி நேரம் ஆகுது போவம் வாங்க ( அது சரி உங்க வேலை முடிஞ்சு தானே)

அம்மா :- போகேக்க கடைல சாப்பாடு எடுத்திட்டு போவம் ..இனி யாரு சமைக்கிற போய் (ம்...நல்ல முடிவு அம்மா)

அனைவரும் பஸ்ஸில் ஏறி யாழ் நகரை அடைந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு பருத்துறை பஸ் எடுத்து வீடு செல்கின்றனர்

வாங்கி வந்த சாப்பாட்டை அனைவரும் கூடி சாப்பிடுகின்றனர். ஒரு புது இலக்கதிலிருந்து திரேசியாவுக்கு Call அடிக்கின்றது.அவள் Cut பண்ணியவாறே சாப்பிட்டு முடிக்கின்றாள் . சாப்பிட்டு முடித்த சைலேஸ்ம் அந்த இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்தவாறே படுக்க தன் அறைக்கு செல்கின்றான். திரேசியா புது இலக்கத்துக்கு "Who R U " எண்டு அனுப்பியவாறே படுக்க.... இல்லை இல்லை.... படுக்கை அறைக்கு செல்கின்றாள்.... அப்ப அம்மாவும் அப்பாவும் ????? ( ஐயோ வாயை மூடிட்டு வாசியுங்க ) .....அவங்க பாவம் Panadol ஐ போட்டவாறே படுக்க செல்கின்றனர்.
இது என்னுடைய கற்பனை மட்டுமே...இங்கு குறிப்பிட்டுள்ள பெயர்கள் யாவும் கற்பனையே...யாரையும் பாதிப்பதற்காக நான் எழுதவில்லை...நல்ல ஆதரவு கிடைத்தால் இன்னும் தொடரும்...

Monday, December 7, 2009

அம்மாக்கே ஒரு தாலாட்டு......

அன்பை இன்பமாக்கி இன்பத்தை கருவாக்கி
கருவை உரு ஆக்கி உருவை உடலாக்கி
உடலை இடை தாங்க இடைக்கிடையே வலிதாக்க
வலிகள் பலியெடுக்க பக்குவமாய் ஈன்றெடுத்த தாயே !


சித்திரையில் வந்துதித்த சிக்கன செல்வமே என்று
முத்திரை பதிக்க வந்த ஆழ்கடல் முத்தே என்று
நித்திரையை நீறாக்கி மாத்திரையை சொத்தாக்கி
பத்தரை மாதமாய் பக்குவமாய் பாலூட்டி வளர்த்த தாயே !


புள்ளி மானே துள்ளி வா என்று
அள்ளி அள்ளி சோற்றை ஊட்டி
சொக்கை நுள்ளி இடுப்பைக் கிள்ளி
பள்ளி அனுப்பி பக்குவப்படுத்திய என் தாயே!


குலப் பண்பை தென்பாக பிடி என்றும்
நிலச் சொத்தை நாலாக பிரி என்றும்
மூலச் சுவட்டை அழியாது பார் என்றும்
தலம் தலமாய் தாவிச் சென்ற என் தங்கத் தாயே!


மொரட்டுவையில் திருட்டு என்றால் வெருட்டுவாய் கவனம் என்று
இங்கும் டெங்காம் என்று தூங்கதே எங்கும் என்பாய்
ஆசையாய் சாப்பிடு காசைப் பார்க்காதே தசையே இல்லை என்பாய்
நூற்றெட்டு சொல்லி நெற்றித் திலகம் இட்ட வெற்றித் தாயே!அந்தமில்லா பிறப்பினிலே உன் சொந்தமாய் நான் உதிக்க
கள்ளமில்லா நெஞ்சினிலே உன் பிள்ளையாய் நான் உதிக்க
என்ன தவம் செய்தேனோ ?என்ன புண்ணியம் செய்தேனோ?(நான்)
என்ன பாவம் செய்தாயோ ?என்ன அநியாயம் செய்தாயோ?(நீ)


தாயே !


விதி விளையாடும் போது வீதிகள் தெரிவதில்லை
சதி இருக்கும் போது சாதிகள் புரிவதில்லை
நிதி இருக்கும் போது நீதிகள் மெய்ப்பதில்லை
பதி இருக்கும் போது பாதியில் விடுவதில்லை


பொறுத்திருப்போம் தாயே !


கதி என்னவென்று அறிய காத தூரம் இன்னும் இல்லை.....................

Tuesday, November 24, 2009

முக்கி முக்கி எழுதிய முதற்பதிவு

நண்பர்களே !
வலைப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.புனைபெயரோடு என் சொற்கணைகளை இணையத்தினூக அணைகடக்க வைக்க வந்திருக்கும் நான்....

சுற்றிக் கொண்டிருக்கின்ற பூமியில் இருந்துகொண்டே சுத்திக் கொண்டிருக்கும் சனத்தை
சுத்தி சுத்தி பார்த்துக்கொண்டிருக்கும் உங்களில் ஒருவன் தான்....

என் பெயரைப் பார்த்து நான் கருணையானவன் என நீங்க நினைத்தால் அது என் தப்பு அல்ல.......

என் பதிவுகளைப் பார்த்து நான் கருணையற்றவன் என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

கருவிலிருந்தே கணைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் இவன் கருணையூரான் என என நீங்க நினைத்தால் அதுவும் என் தப்பு அல்ல.......

( கரு + கணை , இங்கே கணை என்று நான் சொல்லவருவது தமிழ்ச்சொற்கணைகள் )

அப்ப யாரு ? ? ? ? ?

நண்பர்களே!
எனக்கு தமிழ் என்ற கடலுக்குள் தத்தளித்து முக்குளித்து முத்தெடுத்து மாலை தொடுக்க தெரியாது தான்.......

ஆனாலும்..... ஏதோ......

தத்தளித்து முக்குளிக்கின்ற தமிழை தத்தெடுத்து வளர்த்து அதற்கு மாலை அணிய விரும்பும் தமிழர்களில் ஒருவன் தான் நானும்......

என் கண்மணிகளே !
என் கண் மணியின் உதவியோடு பாதுகாக்கப்பட்ட விம்பங்களின் பிரதிபலிப்பைக் கொண்ட என்
கன்னி முயற்சிதான் இது...... நண்பர்களே ! நீங்க
தண்ணி ஊத்தி வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை
கண்ணி வைத்து விடாதீர்கள் இந்த கருணையூரானுக்கு..........

ஒரே தடவையில் அடுத்தடுத்து என் சொற்கணைகளை பதிவுகளாக ஏவி உங்களை
நானும் கஷ்ரப்படுத்த விரும்பவில்லை ஏதோ என்னால் முடிந்தளவு வாரம் ஓரிரு பதிவுகளோடு விரைவில் சந்திப்போம்........
என் பதிவுகளின் வகைப்படுத்தல்கள்
"மின்னாத இடிகள்"
"முகவரியிடா மடல்கள்"
"உறங்காத இரவுகளில்...."
"......................................."
"......................................."

நான் இதை ஆரம்பித்தது என் ஆசையோ இல்லை பேராசையோ எனக்கும் புரியவில்லை...
ஏதோ என் பதிவுகள் உங்கள் இதயத்தை தொட்டுச்சென்றால் நீங்களும் விட்டுச்செல்லுங்களேன் உங்கள் கருத்துக்களை..........நலம் பெற வாழ்த்துக்களோடு நன்றிகளும் கூட.......