Wednesday, May 19, 2010
தலைப்பு..........வெற்றிடம்..........
கலையாத கனவோடு கரையேறிப்போனவர்களே
உறையாத உணர்வோடு உறைந்துபோனவர்களே
வலிக்காத வலியோடு வடிந்துபோனவர்களே
வாழாத வாழ்க்கையோடு வாடிப்போனவர்களே............
சத்தமில்லா நீயும் சடுதியாய் வளர்ந்து
உத்தமனாய் உரிமையை கேட்டிருந்தாய்
இரத்தம் தான் முடிவென்று ரதம் ஏறிவந்து
மொத்தமாய் இன்று முழுவதையும் இழந்துவிட்டாய்.......
ஆண்டாண்டு ஓடிச்சென்றாலும்
மாண்டுபோன உன் வரலாறு அழிந்து போனாலும்
மீண்டுவந்து நீ வரலாறு சொல்லாவிட்டாலும்
குண்டு பட்ட எம் உறவுகள் உன் நினைவை மீட்கும்........
உனக்காக நான் என்ன செய்தேன்
உனக்காக நான் என்ன தந்தேன்
உனக்காக நான் எதை இழந்தேன்
என் மனச்சாட்சி கேட்கும் வினாக்களிற்கு
நான் சொல்லும் பதில் ஒரு துளி பேனா மை மட்டுமே........
அழிந்துபோன உறவுக்காக அலைஅலையா போகவில்லை
மடிந்துபோன உறவை மடியில் வைத்து தாலாட்டவில்லை
உடைந்து போன உறவுகளோடு உருகிஅழவில்லை
எப்படி சொல்ல என்னை.......
சுகபோகத்தை அநுபவிக்க பிறந்த சுயநல தமிழன் என்றா?
இல்லை
பட்டம் பதவிக்கு ஆசைப்பட்ட பரதேசி தமிழன் என்றா ?
மறந்து விடுகிறேன் வாழ்ந்த என் வாழ்க்கையை.........
மன்னித்துவிடு என்னை ........
தமிழனுக்காக வாழ்ந்து தமிழை கொல்லும் தமிழனாக இல்லாமல்
தமிழனுக்காகவும் வாழாமல் தமிழையும் கொல்லும் தமிழனாகவும் இல்லாமல்
தமிழனுக்காக வாழாமல் தமிழுக்காக வாழ்ந்த ஒரு தமிழனாக உன்னை சேரும் வரை......................
Subscribe to:
Posts (Atom)