
முதலாவதாக காதல் , காமம் இரண்டும் சந்தித்து பேசினால் எவ்வாறு இருக்கும்
காதல் :- ஏய் காமம் ! எதற்காக நான் இருக்கும் இடமெல்லாம் நீயும் வருகின்றாய். உனக்கு வெட்கம் இல்லையா ?
காமம்:- ( சற்று கோபத்துடன்) நான் இல்லாமல் நீ தனித்து வாழ முடியுமா ? நான் வந்திருக்காவிட்டால் நீ வந்திருப்பியா ? ஆனால் நீ இல்லாமலும் நான் வாழ்வேன்
காதல் :-நீயும் ஒரு கொல்லாமல் கொல்லும் சர்வாதிகாரிதான் .என் இடத்தினுள் புகுந்த நீ இப்போ " நட்பு " என்று பல இடங்களில் புகுந்து விட்டாயே
காமம்:- ( ஆணவச் சிரிப்புடன் ) நான் கத்தரிக்காயிலும் இருப்பேன் புடலங்காயிலும் இருப்பேன் நீ யார் கேட்பதற்கு ?
பின்னை பாருங்கோவன்

அடுத்ததாக நட்பு , காதல் , காமம் , கல்யாணம் , மரணம் இவைகளின் ஒரு திருவிளையாடல் எப்படி இருக்கு என்று பாருங்கள்
நட்பு ஒரு இடத்தில் நீண்ட காலமாக குடிகொண்டிருந்தது. அந்த வழியால் வந்த காதல் நட்பு இருந்த இடத்திற்கு சென்றது :-
காதல் :- நட்பே நட்பே ! சிறிது காலம் உன் வீட்டில் இருந்து விட்டு போகலாமா ?
நட்பு :- அதுக்கென்ன , அந்த மூலையில் சற்று இருந்து விட்டு செல்.
அந்த வழியால் வந்த காமம் இதனை அறிந்து நட்பின் இடத்துக்கு சென்றது
காமம் :- நட்பே நட்பே ! சற்று களைப்பாக இருக்கிறது .சற்று இருந்து விட்டு செல்லலாமா ?
நட்பு :- அதுக்கென்ன மற்ற மூலையிலே சற்று இருந்து விட்டு செல்
மீண்டும் செல்லாமல் அவ்வாறே குடிகொண்டன காதலும் காமமும் . பல காலம் சென்ற பின் கல்யாணம் அங்கு புகுந்து கேட்டது
கல்யாணம் :- நானும் இங்கு வந்து இருக்கலாமா ? அப்படி என்றால் யாரை கேட்க வேணும்
காமம் :- நான் தானே இப்படி ஒரு இடம் இருக்கு . இங்கே வந்தால் இருக்கலாம் என்று கூறினனே
காதல் :- இல்லை இல்லை என்னை தான் கேக்கணும். நான் தான் இங்கே பெரிய ஆள்
நட்பு :- ஐயோ என்ர ஐயோ என் வீட்டுக்குள் வந்தே என்னையே மறந்திட்டிங்க. எனக்கு ஒரு மூலை இடம் தாங்க நான் இருந்திட்டு போகிறேன்
இவர்களின் சத்தத்தை வீதியால் சென்றுகொண்டிருந்த மரணத்துக்கு கேட்டுவிட்டது.அங்கே வந்த மரணம்
மரணம் :- யார் எல்லாம் நீங்கள் , இவை எல்லாம் எனக்கு சொந்தமான இடங்கள் .நீங்கள் எல்லாரும் வந்தேறியகுடிகள் தான் .புறப்படுங்கள்

அடுத்ததாக கடவுளிடம் ஒரு மனிதன் பேசுகின்றான்
மனிதன் :- கடவுளே !
பூவுக்குள் தேனை வைத்தாய்
அதை தேனீக்கு சொல்லி வைத்தாய்......
கல்லுக்குள் ஈரத்தை வைத்தாய்
அதை தேரைக்கு சொல்லி வைத்தாய்......
சிற்பிக்குள் முத்தை வைத்தாய்
அதை மனிதனுக்கு சொல்லி வைத்தாய்......
என்னுள் என்ன வைத்தாய்
அதை யாருக்கும் சொல்லி வைக்கும் அளவுக்கு......
கடவுள் :- ( சிரித்தவாறே ) தேனீயோ தேரையோ எல்லாம் தேடல் மூலம் தான் கண்டுபிடித்தன .நீயும் உன்னுள் இருப்பதை முதலில் தேடு வாழ்வில் வெற்றி பெறுவாய்
மனிதன் :- தேடல் மூலம் நூற்றெட்டு கடவுளை கண்டுபிடித்து இவ்வாறு கேட்டு அலுத்துவிட்டேன் . இன்னும் தேடல் தான் என் வாழ்க்கை என்றால் இன்றிலிருந்து மரணத்தையே தேடுகின்றேன்
கடவுள் :- ( நக்கல் சிரிப்புடன் ) மரணத்தை நீ தேட தேவை இல்லை அது தானாக தேடி வரும் .

அடுத்ததாக நிலாவும் மனிதனும் பேசுகின்றார்கள்
மனிதன் :- நிலாவே ! இவ்வளவு அழகாக இருக்கின்ற நீ எதற்காக அழுக்கு நிறைந்த பூமியை காதலித்து சுற்றிக்கொண்டிருக்கின்றாய்
நிலா :- இல்லை இல்லை நீ இங்கே வந்து பார் எவ்வளவு அழகாக இருக்கிறதே பூமி அதுதான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
மனிதன்:- ஓகோ அப்படியா ! வேண்டாம் நான் அங்கு வந்தால் உன் மீது நான் கொண்ட காதலும் வெறுப்படையலாம் . நானும் இங்கிருந்தே உன்னை காதலிக்கின்றேன்