Monday, December 7, 2009

அம்மாக்கே ஒரு தாலாட்டு......

அன்பை இன்பமாக்கி இன்பத்தை கருவாக்கி
கருவை உரு ஆக்கி உருவை உடலாக்கி
உடலை இடை தாங்க இடைக்கிடையே வலிதாக்க
வலிகள் பலியெடுக்க பக்குவமாய் ஈன்றெடுத்த தாயே !


சித்திரையில் வந்துதித்த சிக்கன செல்வமே என்று
முத்திரை பதிக்க வந்த ஆழ்கடல் முத்தே என்று
நித்திரையை நீறாக்கி மாத்திரையை சொத்தாக்கி
பத்தரை மாதமாய் பக்குவமாய் பாலூட்டி வளர்த்த தாயே !


புள்ளி மானே துள்ளி வா என்று
அள்ளி அள்ளி சோற்றை ஊட்டி
சொக்கை நுள்ளி இடுப்பைக் கிள்ளி
பள்ளி அனுப்பி பக்குவப்படுத்திய என் தாயே!


குலப் பண்பை தென்பாக பிடி என்றும்
நிலச் சொத்தை நாலாக பிரி என்றும்
மூலச் சுவட்டை அழியாது பார் என்றும்
தலம் தலமாய் தாவிச் சென்ற என் தங்கத் தாயே!


மொரட்டுவையில் திருட்டு என்றால் வெருட்டுவாய் கவனம் என்று
இங்கும் டெங்காம் என்று தூங்கதே எங்கும் என்பாய்
ஆசையாய் சாப்பிடு காசைப் பார்க்காதே தசையே இல்லை என்பாய்
நூற்றெட்டு சொல்லி நெற்றித் திலகம் இட்ட வெற்றித் தாயே!



அந்தமில்லா பிறப்பினிலே உன் சொந்தமாய் நான் உதிக்க
கள்ளமில்லா நெஞ்சினிலே உன் பிள்ளையாய் நான் உதிக்க
என்ன தவம் செய்தேனோ ?என்ன புண்ணியம் செய்தேனோ?(நான்)
என்ன பாவம் செய்தாயோ ?என்ன அநியாயம் செய்தாயோ?(நீ)


தாயே !


விதி விளையாடும் போது வீதிகள் தெரிவதில்லை
சதி இருக்கும் போது சாதிகள் புரிவதில்லை
நிதி இருக்கும் போது நீதிகள் மெய்ப்பதில்லை
பதி இருக்கும் போது பாதியில் விடுவதில்லை


பொறுத்திருப்போம் தாயே !


கதி என்னவென்று அறிய காத தூரம் இன்னும் இல்லை.....................

9 comments:

Anonymous said...

ஆகா ...ம்....கலக்கிடிங்க .....

Anonymous said...

அழகான, உணர்வான ஒற்றை சொல் அம்மா.. அந்த புனிதமான இனி யாராலும்
தர முடியாத கள்ளம் கபடம் அற்ற தாயுடனான உணர்வுகளை நீங்கள் கவிதையாய் வடித்தது உங்கள் திறமை ....
மிகவும் நல்லாக இருக்குறது ...
மேலும் எழுத எனது வாழ்த்துகள் ....

கருணையூரான் said...

நன்றிகள்...உங்கள் பெயரை குறிப்பிட்டு சொன்னால் நன்றாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

அன்னைக்கே அமுதம். அழகு அருமை.. வாழ்த்துக்கள்..

கருணையூரான் said...

மலிக்கா நன்றிகள்

Unknown said...

////விதி விளையாடும் போது வீதிகள் தெரிவதில்லை
சதி இருக்கும் போது சாதிகள் புரிவதில்லை
நிதி இருக்கும் போது நீதிகள் மெய்ப்பதில்லை
பதி இருக்கும் போது பாதியில் விடுவதில்லை///

கவிதையில் வந்த அற்புதமான அர்த்தங்களை ரசித்தேன்.

சிறப்பான வரிகள்
நன்று

கருணையூரான் said...

நன்றிகள் கரவைக்குரல்

பால்குடி said...

அருமை... அருமையான தமிழ் மொழிக் கோர்ப்பு. தமிழில் இப்பிடி அழகாகவும் எழுதலாம் என புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கோ...

கருணையூரான் said...

பால் குடி நன்றிகள் ....

Post a Comment